Sunday, October 13, 2013

நினைவில் கொள்ளுங்கள்:
குறுக்கே பேசினால் மறந்துபோகும்!

நினைவில் கொள்ளுங்கள் - குறுக்கே பேசினால் மறந்து போகும்

குறுக்கே பேசினால் மறந்துபோவேன் என்று சொல்லவந்ததை,
ஒருவர் குறுக்கே பேசியதால் மறந்துபோய்விட்டு,
எதைச் சொல்லவந்தோம் என்று தெரியாமல்
மறந்துபோனதை நினைவுபடுத்திக்கொண்டிருந்தேன்!

எதையோ யோசித்துக்கொண்டிருந்தவரிடம்
எதேச்சையாகக் கேட்கப்போய் அவர் நினைவுபடுத்தினார்
குறுக்கே பேசாதீர் - மறந்துபோய்விடுவேன் என்று. . .

அட! குறுக்கே பேசினால் நினைவுக்குவருகிறது!
இனி எப்படி நினைவுகொள்வது
குறுக்கே பேசினால் மறந்துபோய்விடுவேன் என்பதை?!

நல்லவேளை!
என்னைப் போல அவரும் மறந்துபோயிருந்தால். . .
அவரும் யாரிடமாவது போய்
குறுக்கே பேசவேண்டியிருந்திருக்கும்!

இனி குறுக்கே பேசுவதை மறந்துவிடுங்கள்
மறந்துபோனால் குறுக்கே பேசவேண்டும் என்பதை
நினைவில்கொள்ளுங்கள்

மறந்துவிட்டதை நினைவில்கொள்வதோ
நினைவில் கொண்டதை மறந்துவிடுவதோ
நடந்துவிட்டால், பிறகு
நினைவில்லாமல் குறுக்கேபேசிவிட்டு,
மறந்துபோனபின் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிவரும்!

சுயநினைவோடு,
-தமிழ் வசந்தன்